ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!
பொருள் :
"வாமனாவதாரத்தில் மஹாபலியிடம் மூன்றடி மண்ணை இரந்து பெற்று, விஸ்வரூபமெடுத்து, மூன்று உலகங்களையும் தன் திருப்பாதங்களால் அளந்த புருஷோத்தமனுடைய நாமத்தைப்போற்றிப் பாடி, பாவை நோன்புக்கு வேண்டி அதிகாலை நாங்கள் நீராடினால்,
பிணி, பஞ்சம் போன்ற தீங்கினால் நலிவுறாமல், நாடு முழுவதும் மும்மாரி மழை பெய்திடும். அதனால் செழித்து வளர்ந்த சிவந்த நெற்பயிர்களுக்கு நடுவே கெண்டை மீன்கள் துள்ளி விளையாடும். அங்குள்ள நீலவண்ணக் குவளை மலர்களில் புள்ளி வண்டுகள் உறங்கும். வள்ளல் குணம் கொண்ட பசுக்கள் பாலை சிறிதளவும் தேக்கிக் கொள்ளாமல், கறப்பவரின் கை தங்கள் பெருத்த மடியில் பட்ட மாத்திரத்திலேயே பாலைக் குடம் நிறைய சுரக்கும். இங்கனம், அழியாத செல்வம் எங்கும் நிறைந்து காணப்பெறும்."
--
SARAVANAN SHANMUGAM
சரவணன் சண்முகம்
E.mail: Shaanmugam@yahoo.com, Shaanmugam@gmail.com
Blog:http://tambaramshanmugam.blogspot.com
Monday, September 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment